போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்திய பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு

நில ஆக்கிரமிப்பாளர்களை கைது செய்ய சென்றபோது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்திய பா.ஜனதா எம்.பி. முனிசாமி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-09-11 18:45 GMT

கோலார் தங்கவயல்

நிலம் ஆக்கிரமிப்பு

கோலார் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை தனியார் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதில் விவசாயிகள் சிலர் விவசாயம் செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல்கள் சென்றன.

அதன்பேரில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தொடங்கினர். இதுவரை 600 ஏக்கர் நிலங்களை வனத்துறையினர் மீட்டுள்ளனர். இந்த நிலையில் சினிவாசப்பூர் தாலுகாவில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்க வனத்துறையின் சென்றபோது பிரச்சினை ஏற்பட்டது.

போலீசாருக்கு இடையூறு

முதலாவதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திர வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் 2 பெண்கள் ஆக்கிரமிப்புகளை மீட்க எதிர்ப்பு தெரிவித்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனால் சீனிவாசப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டம் மக்களிடையே பரவ தொடங்கியது. இதனால் போராட்டம் நகரில் அமைதி நிலவ கொடி அணிவகுப்பும் நடத்தினர். இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கைது செய்ய போலீசார் சென்றனர்.

அப்போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முனிசாமி எம்.பி. நடந்து கொண்டார். மேலும் கோலார் மாவட்ட பா.ஜனதா தலைவர் வேணுகோபாலும் செயல்பட்டார். அதாவது அவர்கள் இருவரும் போலீசாரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

முனிசாமி எம்.பி.

இதனால் போலீசார், முனிசாமி எம்.பி. கோலார் மாவட்ட பா.ஜனதா தலைவர் வேணுகோபால், பொது செயலாளர் சுரேஷ் நாராயண் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்ததால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முனிசாமி எம்.பி., கோலார் மாவட்ட பா.ஜனதா தலைவர் வேணுகோபால், பொது செயலாளர் சுரேஷ் நாராயணா, துணைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும 10-க்கும் மேற்பட்டோரை வலைவீசி தேடி வருறோம்.

வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகிறவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்