தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த டென்மார்க் பட்டத்து இளவரசர்..!!

டென்மார்க் பட்டத்து இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியும், இளவரசியுமான மேரி எலிசபெத் ஆகியோர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

Update: 2023-02-26 22:56 GMT

புதுடெல்லி,

டென்மார்க் நாட்டு பட்டத்து இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன்-மேரி எலிசபெத் தம்பதியை இந்தியா வருமாறு துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் அழைப்பு விடுத்திருந்தார். இதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி அரசு முறை பயணமாக நேற்று அவர்கள் இந்தியா வந்தனர். அவர்களுடன் டென்மார்க் வெளியுறவு மந்திரி லூக் ராஸ்முசன், சுற்றுச்சூழல் மந்திரி மாக்னஸ் ஹியூனிக், எரிசக்தி துறை மந்திரி லார்ஸ் அகார்டு ஆகியோரும் வந்துள்ளனர். இந்தியா வந்துள்ள இளவரசர் தம்பதியர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர். அங்கு அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நட்புறவை வலுப்படுத்தும்

டெல்லியில் அவர்கள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கரை சந்தித்து பேசுகின்றனர். அத்துடன் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இருநாட்டு கருத்தரங்கு ஒன்றில் இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன் உரையாற்றுகிறார். மேலும் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் டென்மார்க் பட்டத்து இளவரசர் சந்தித்து பேசுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 'இந்தியாவும் டென்மார்க்கும் துடிப்பான மற்றும் வெளிப்படையான ஜனநாயக நாடுகளாக, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இளவரசர் தம்பதியின் இந்தப் பயணம் இந்தியா-டென்மார்க் இடையிலான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

20 ஆண்டுகளில் முதல் முறை

டெல்லியில் தங்கள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு டென்மார்க் பட்டத்து இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் தம்பதியர் தமிழகம் வருகின்றனர். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர்கள் 2-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்நாடு திரும்புகின்றனர்.

டென்மார்க் அரச குடும்பத்தினரின் இந்திய பயணம் கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் என மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்