ராக்கி கட்ட சகோதரன் கேட்ட மகள்: ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதி - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
ராக்கி கட்ட சகோதரன் வேண்டும் என்று மகள் கேட்டதற்காக ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டுவதற்கு சகோதரன் வேண்டும் என்று மகள் கேட்டதற்காக ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சட்டா ரெயில் சவுக்கின் நடைபாதையில் வசிக்கும் ஊனமுற்ற பெண் ஒருவரின் ஒரு மாத ஆண் குழந்தை காணாமல் போனது. யாரோ குழந்தையை கடத்திவிட்டதாக சந்தேகித்த குழந்தையின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக இரண்டு பைக்குகள் அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததை கண்டறிந்தனர். அந்த பைக் தாகூர் கார்டனில் உள்ள ரகுபீர் நகரில் வசிக்கும் சஞ்சய் குப்தா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 15 போலீசார், ஆயுதங்களுடன் தாகூர் கார்டனின் ரகுபீர் நகரில் உள்ள சி-பிளாக்கிற்குச் சென்றனர். அங்கு கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தனர். சஞ்சய் குப்தா (வயது 41) மற்றும் அனிதா குப்தா (36) என்ற தம்பதி குழந்தையை கடத்தியது தெரிய வந்தது.
அவர்களது 17 வயது மகன் கடந்த ஆண்டு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் அவர்களது 15 வயது மகள் வரவிருக்கும் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்ட ஒரு சகோதரன் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்கள் குழந்தையை கடத்திச் சென்று தங்கள் மகனாக வளர்க்க முடிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.