பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.

Update: 2022-10-12 19:18 GMT

பணமதிப்பிழப்பு

பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந்தேதி திடீரென டி.வி.யில் தோன்றிப்பேசினார். அப்போது அவர், அதிரடியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

இது கருப்பு பணத்துக்கு எதிரான துல்லிய நடவடிக்கை என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திடீரென இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பலரும் பாதிப்புக்குள்ளாகினர். செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு தரப்பட்டாலும் பல மணி நேரம் வங்கிகளில், ஏ.டி.எம். மையங்களில் கால் கடுக்க காத்து நிற்கும் நிலை உருவானது.

'ரிட்' வழக்குகள்

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 57 'ரிட்' வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் நீதிபதிகள் கவாய், போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், நாகரத்தினா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, "பண மதிப்பிழப்பு சட்டத்தை சரியான பார்வையில் எதிர்க்காவிட்டால், இந்த பிரச்சினை தத்துவார்த்த ஆர்வமாக மட்டுமே இருக்குமே தவிர நடைமுறை தொடர்பு இல்லாததாக (அகாடமிக்) இருக்கும்" என்று குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், "இந்த பிரச்சினைக்கு பதில் அளிக்க நாங்கள் அது தத்துவார்த்த ஆர்வமாக மட்டுமே இருந்து, நடைமுறை தொடர்பு இல்லாததா, அப்படி இல்லையா அல்லது நீதித்துறை பரிசீலனைக்கு அப்பாற்பட்டதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இது அரசின் கொள்கை மற்றும் அதன் விவேகம் சார்ந்தது என்பது இந்த வழக்கின் ஒரு அம்சம். லட்சுமண ரேகையின் இருப்பிடம் (அதாவது, எல்லை) எங்களுக்கு எப்போதுமே தெரியும். ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விதம், ஆராயப்பட வேண்டும். அதை முடியவு செய்ய நாங்கள் வக்கீல்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்" என கூறினர்.

கோர்ட்டு நேரம் வீணடிப்பா?

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அனுமானம் அல்லது கோட்பாடு சார்ந்த (அகாடமிக்) பிரச்சினையில், கோர்ட்டு நேரம் வீணடிக்கப்படக்கூடாது" என கூறினார். இதற்கு வழக்குதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியாம் திவான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "இந்த வழக்குகள் அரசியல் சான அமர்வின்முன் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்று முந்தைய அமர்வு கூறிய நிலையில், அரசியல் சாசன அமர்வின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்ற வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது" என கூறினார்.

மற்றொரு வழக்குதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ப.சிதம்பரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்பற்றப்படாத விதிமுறைகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தார்.

உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்குகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்