கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அனுமதி

கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-15 21:02 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பிரமாண பத்திரம்

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக மாநில அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த பொதுத்தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஒரு நீதிபதி அமர்வு, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசு ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது விசாரணை தொடங்கி நடைபெற்றது. நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது.

அப்போது மாநில அரசு தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வழக்கு நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஐகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுக்கு முன்னதாக இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மீதான பயம் போகும் என்றும், இது திறனை சோதிக்கும் தேர்வே தவிர, யாரையும் தோல்வி அடைய அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும் வாதிட்டார்.

அனுமதி அளித்து உத்தரவு

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கர்நாடகத்தில் திட்டமிட்டபடி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் இந்த தேர்வில் எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என்று உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் 5, 8-ம் வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்