பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-10 21:01 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி அத்திகுப்பே வார்டு முன்னாள் கவுன்சிலர் தொட்டய்யா. இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் கவுதம் (வயது 29). சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொட்டய்யா தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு கவுதம் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அவர் பூட்டிக் கொண்டுள்ளார்.

இரவில் சாப்பிடுவதற்காக கவுதமை பெற்றோர் அழைத்துள்ளனர். அவர், எந்த பதிலும் சொல்லவில்லை. செல்போனுக்கு அழைத்த போதும் அவர் எடுத்து பேசவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கவுதம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள். இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கவுதம் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கவுதமுக்கு, அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால் குடும்பத்தினர் பார்க்கும் பெண்களை தனக்கு பிடிக்கவில்லை என்று கவுதம் கூறி வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 4 மாதங்களாகவே மிகவும் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கவுதம் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. தற்கொலை செய்யும் முன்பாக அவர் கடிதம் எதுவும் அவர் எழுதி வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

தனது மகன் மாநகராட்சி ஒப்பந்ததாரர் இல்லை என்றும், அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்றும் தெரியவில்லை என மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தொட்டய்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கவுதம் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், நண்பர்களிடமும் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்