ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2024-04-16 07:41 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்பட பல பயணிகளை ஏற்றி சென்ற படகு இன்று அதிகாலை கவிழ்ந்தது. அதிகாலை வேளையில் படகு கவிழ்ந்ததாக பட்வாரா கந்தபால் பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேரை மீட்டு அருகில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கர் கூறுகையில், "7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

இந்த விபத்தில் மேலும் சிலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்பதால் அவர்களை தேடும் பணிகளை மாநில பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உள்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக முக்கியமான ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பள்ளத்தாக்குக்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்