டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்

Update:2023-09-10 00:43 IST
Live Updates - Page 3
2023-09-10 03:49 GMT

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வங்காளதேச பிரதமர் வருகை

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை பிரதமர் மோடி வரவேற்றார்.



2023-09-10 03:30 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர். இந்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில், இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



2023-09-10 03:24 GMT

ஓமன் துணை பிரதமர் வருகை

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தெரிக்யு பின் தைமூர் அல் செட் வருகை தந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.



2023-09-10 03:20 GMT

ஐ.நா. பொதுச்செயலாளர் வருகை

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருகை தந்தார்.

அவரை தொடர்ந்து உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.



2023-09-10 03:16 GMT

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சர்வதேச நாணய நிதிய தலைவி வருகை

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஆசியன் வளர்ச்சி வங்கி தலைவர் மசட்சுஹு அஸ்கவா, சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டிலினா ஜார்ஜிவா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர்.



2023-09-10 03:06 GMT

மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மரியாதை

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இன்று 2ம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். 

2023-09-10 02:10 GMT

டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர் வழிபாடு

ஜி20 உச்சிமாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு தலைமை வகிக்கும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜி20 உச்சிமாநாடு இன்று 2வது நாளாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாடு தலத்திற்கு இன்று காலை சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அங்கு மத வழிபாடு செய்தார். ரிஷி சுனக் உடன் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் வழிபாடு செய்தார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



2023-09-09 23:42 GMT

ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது.

ஜி-20 உச்சி மாநாடு

தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதைப்போல வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்தார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வுக்குப்பின் இந்த சந்திப்பு நடந்தது.

‘நமேஸ்தே’ கூறிய ரிஷி சுனக்

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக பிரதமர் மோடியை சந்திக்க வந்த ரிஷி சுனக், ‘நமஸ்தே’ எனக்கூறி பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார்.

இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஒரு வளமான மற்றும் நிலையான பிரபஞ்சத்துக்காக இரு நாடுகளும் தொடர்ந்து உழைக்கும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

ஜப்பான் பிரதமர்

இதைப்போல ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். மாநாட்டுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து அவர், ‘பிரதமர் கிஷிடாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தினேன். இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.

இத்தாலி பிரதமருடன் சந்திப்பு

பின்னர் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன் சிறப்பான சந்திப்பு நிகழ்ந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல துறைகளை சார்ந்து எங்கள் பேச்சுவார்த்தை இருந்தது. உலக நலனுக்காக இந்தியாவும், இத்தாலியும் இணைந்து செயல்படும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு மாநாட்டுக்கு இடையே 15-க்கும் மேற்பட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

2023-09-09 23:32 GMT

ஜனாதிபதி அளித்த விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

டெல்லியில் ஜி-20 மாநாட்டு அரங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இரவு விருந்து

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.30 மணி அளவில் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார்.

விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், மாலை வரை அறையில் ஓய்வெடுத்தார்.

பின்னர் மாலை 5.45 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். வேட்டி- சட்டை அணிந்து சட்டைக்கு மேல், அரை கோட்டு அணிந்திருந்தார். அதிகாரிகள் அவரை நாடாளுமன்ற வளாகம் வரை கொண்டு விட்டனர். இதைப்போல பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்றனர்.

இன்று திரும்புகிறார்

பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனம் மூலம் பிரகதி மைதானத்துக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு முதலில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு விருந்து தொடங்கியது. இதில் பங்கேற்றபின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகம் வந்து பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லம் திரும்பினார்.

இரவில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.50 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

2023-09-09 23:14 GMT

பாரத் மண்டபத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து


ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து வழங்கினார்.

நாளந்தா பல்கலைக்கழகம்

டெல்லியில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று பல்வேறு அமர்வுகள் நடந்தன. அத்துடன் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து வழங்கினார். இதற்காக பாரத் மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புகைப்படத்தை பின்புலமாக கொண்டு விருந்து அரங்கின் நுழைவாயில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் ஒருபுறம் உச்சி மாநாட்டின் லோகோவும், மறுபுறம் மாநாட்டின் கருப்பொருளும் இடம் பெற்றிருந்தன.

தலைவர்கள் வியப்பு

விருந்து நடைபெற்ற அரங்குக்கு வந்த தலைவர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் நாளந்தா பல்கலைக்கழக புகைப்படங்களை பார்வையிட்டு, பழங்கால இந்தியர்களின் கல்விப்புலமையை எண்ணி வியந்தனர்.

5 மற்றும் 12-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பீகாரில் இயங்கி வந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அவர்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை, தகுதி, சிந்தனை சுதந்திரம், கூட்டு நிர்வாகம், சுயாட்சி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாக பிரதமர் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட ஜி-20 தலைவர்கள் வியப்பை வெளியிட்டனர். குறிப்பாக நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அறிந்து கொள்வதில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் அதிக ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.

அர்ப்பணிப்புக்கு சான்று

உலக அளவில் உருவான ஆரம்பகால சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகப் புகழ் பெற்ற நாளந்தா, இந்தியாவின் மேம்பட்ட கல்வியின் நீடித்த சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.

மகாவீரர் மற்றும் புத்தரின் சகாப்தத்திற்கு முந்தைய மரபை கொண்ட இந்த பல்கலைக்கழகம் மக்களின் புலமையை வளர்ப்பதிலும், அறிவைப் பரப்புவதிலும் பண்டைய இந்தியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவின் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப்பொருளான வாசுதெய்வ குடும்பகம் என்ற உலகளாவிய பிணைப்பைக் கொண்டு இணக்கமான உலக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு வாழும் சான்றாகவும் இருந்தது என்பது சிறப்புக்குரியதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்