டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது
டெல்லி,
Live Updates
- 10 Sept 2023 9:16 PM IST
ஆப்பிரிக்க யூனியன் தலைவர் கூறும்போது, உலகில் 5-வது சூப்பர் பவர் நாடாக இந்தியா உள்ளது.
அதனால், இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் போதிய இடம் உள்ளது. விண்வெளிக்கு சென்று அதிக சக்தி படைத்த நாடாக இந்தியா உள்ளது என்பதும் நமக்கு தெரியும். இந்தியா ஒரு சூப்பர்பவராக உள்ளது. சீனாவை விட முன்னேறி உள்ளது என கூறியுள்ளார்.
- 10 Sept 2023 8:29 PM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக, தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.
அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்த காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால், உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து சென்று விசாரித்தனர்.
- 10 Sept 2023 7:27 PM IST
சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளாமல் புதின் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷியாவின் வெளியுறவு மந்திரி லாவ்ரவ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரேசில் அதிபர் பதில் அளித்து உள்ளார்.
- 10 Sept 2023 6:29 PM IST
டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக ஜி-20 உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில், மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் நேற்று வழங்கப்பட்டது.
இதனை குறிப்பிட்ட இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், விருந்தினர்கள் கடவுளுக்கு சமம் என மீண்டும் இந்தியா காட்டியுள்ளது என இன்று தெரிவித்து உள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்து பதிவில் ஜி-20 பாரத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 10 Sept 2023 5:18 PM IST
சிறந்த பூமிக்காக ஜி-20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் நடைபெற்றன என பிரதமர் மோடி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இதனை டேக் செய்து, நடிகர் ஷாருக் கான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
- 10 Sept 2023 4:33 PM IST
டெல்லி: கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்
டெல்லியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு (ஆர்ச்டயோசீஸ்) ஒன்றின் பாதிரியாராக நிகோலஸ் டயஸ் உள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து, இறைவணக்கத்தில் ஈடுபட்டார். அதிபர் பைடன் புறப்பட்டு செல்லும் முன், கிறிஸ்தவ பாதிரியார் டயசுக்கு நாணயம் பரிசளித்து உள்ளார்.
- 10 Sept 2023 3:19 PM IST
ரஷியா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படுவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஈடுபடுத்தும் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த ஜி-20 உச்சி மாநாட்டு தீர்மானம் அமைந்துள்ளது என வெள்ளை மாளிகையை சேர்ந்த முதன்மை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜோன் பைனர் தெரிவித்து உள்ளார்.
- 10 Sept 2023 2:29 PM IST
ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, நாட்டின் பாரம்பரிய இசையை கொண்டு கச்சேரி நடத்தப்பட்டது.
இதில், 78 கலைஞர்கள் பங்கேற்று, இந்துஸ்தானி, கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
- 10 Sept 2023 2:01 PM IST
ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.
இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.
1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம். 2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி. 3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.
‘நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே’ பிரேசில் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும்.
பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணிதிரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட உள்ளன’ என்றார்.
- 10 Sept 2023 1:44 PM IST
டெல்லி ஜி20 உச்சிமாநாடு நிறைவு - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. மாநாட்டின் இறுதியில் ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவிடமிருந்து பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.
இதனிடையே, ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டத்தின் இறுதியில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கும் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது என உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த இரு நாட்களில் நீங்கள் நிறைய ஆலோசனைகளை வழங்கினீர்கள்.
எங்களுக்கு கிடைத்துள்ள ஆலோசனைகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்து அவற்றின் முன்னேற்றத்தை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதை பார்ப்பது எங்கள் கடமையாகும். வரும் நவம்பர் மாத இறுதியில் நாங்கள் காணொலி காட்சி மூலம் ஜி20 கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்கிறோம். இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தலைப்புகள் குறித்து நாம் காணொலி காட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம். நீங்கள் அனைவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறோம். இத்துடன் ஜி20 உச்சிமாநாடு நிறைவடைகிறது என நான் அறிவிக்கிறேன்’ என்றார்.