விஷ செடியை தின்று 35 ஆடுகள் செத்தன
தாவணகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் செத்தன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாவணகெரே:
தாவணகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் செத்தன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடு மேய்ப்பவர்கள்...
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பரசுராம்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சப்பா, சிவண்ணா, கரியப்பா, சித்தானந்தா, ஏரண்ணா. விவசாயிகளான இவர்கள் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். மேலும் இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று விளைநிலத்தில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா அருகே ஒட்டிஹாலு கிராமத்தில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வந்தனர்.
35 ஆடுகள் செத்தன
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்கள் அந்தப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆடுகள் அங்குள்ள தோட்டங்களையொட்டி உள்ள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக ஆடுகள் மயங்கி விழுந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், செய்வதறியாது திகைத்தனர். பின்னர் இதுகுறித்து கால்நடை டாக்டர் புரந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கால்நடை டாக்டர் புரந்தர் விரைந்து வந்து ஆடுகளை பார்வையிட்டார். அப்போது 35 ஆடுகள் ஏற்கனவே செத்தது தெரியவந்தது. மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடின. அவற்றுக்கு சிகிச்சை அளித்து கால்நடை மருத்துவர் காப்பாற்றினார்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இந்த நிலையில் தோட்டத்தை ஒட்டி உள்ள விஷ செடியை தின்றதால் அந்த ஆடுகள் செத்ததாக கால்நடை டாக்டர் புரந்தர் தெரிவித்தார். 35 ஆடுகள் செத்ததால் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.