எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-15 20:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர். ஜனநாயக அமைப்பில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்கள் பணி தொடர்பாக அவர்கள் அரசு அதிகாரிகளை நாடி தகவல் பெறவோ, யோசனை தெரிவிக்கவோ வேண்டி இருக்கிறது.

அப்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டன. அவ்வப்போது அவை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை தொகுத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்.

இதை மாநில, மாவட்ட அளவில் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்வகையில் சுற்றறிக்கையாக வெளியிடுங்கள். இதை அதிகாரிகள் எழுத்திலும், செயலிலும் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறினால், அச்செயல் கடுமையாக அணுகப்படும். உரிய விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை வழங்கப்படும்.

எம்.பி.க்களிடம் இருந்து வரும் கடிதத்தை உடனடியாக கவனிக்க வேண்டும். பதில் அனுப்ப வேண்டும். மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். தாமதப்படுத்தும் நோக்கில் செயல்படக்கூடாது.

அரசு ஊழியர்கள், தங்கள் சொந்த காரியங்களுக்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அணுகுவதும், அவர்களது செல்வாக்கை பயன்படுத்துவதும் நடத்தை விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்