அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் பயங்கரவாதியைபோல் நடத்துகிறார்கள் - பகவந்த் மான் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.

Update: 2024-04-15 09:29 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முதல்-மந்திரியுமான பகவந்த் மான் திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அவரை நடத்துகிறார்கள். பிரதமருக்கு என்ன வேண்டும்? வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பா.ஜ.க.,வின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி நடத்தப்படுகிறார்.

எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு, என்னை விடுங்கள், பஞ்சாப்பில் எல்லாம் நன்றாக உள்ளதா? என்று கேட்டார். ஏனென்றால், நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்