மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு

தொட்டபள்ளாப்புராவில் அரசு என்ஜினீயர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-09 21:27 GMT

பெங்களூரு:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா தாலுகா மோபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அரசு என்ஜினீயர் ஆவார். இவருக்கு சொந்தமாக அந்த கிராமத்தில் பழைய வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் அருகே நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்கத்திற்காக நேற்று முன்தினம் அவரது வீட்டை அனுமதி பெற்றுஅதிகாரிகள் இடித்தனர்.அப்போது அவரது வீட்டின் இடிபாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடந்தன. அதனை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் விசாரணை

அப்போது அவை தேர்தல் சமயங்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த எந்திரங்கள், எதற்காக என்ஜினீயர் வீட்டில் வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் என்ஜினீயர் சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடத்தப்பட்ட விசாரணையில் என்ஜினீயர் வீட்டில் இருந்தது, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது நிராகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ஜினீயர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்