கேரளா: ரெயில் மோதி யானை படுகாயம் - என்ஜின் டிரைவர் மீது வழக்குப்பதிவு
யானையால் எழுந்து நிற்க முடியாமல் இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோட்டேக்காடு ரெயில் நிலையம் அருகே வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் யானை ஒன்று கிடப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
யானையின் பின்னங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், யானையால் எழுந்து நிற்க முடியாமல் இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த யானை ரெயிலில் மோதி படுகாயம் அடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத என்ஜின் டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த யானையால் நகர முடியாததால், அருகில் உள்ள யானைகள் முகாமில் இருந்து உணவு, மருத்துவ உதவிகள் ஆகியவை வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.