மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் 2-ம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும் என்றும், அதன்படி, மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர், வந்தே பாரத் ரெயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

Update: 2023-10-20 18:45 GMT

பெங்களூரு-

நாட்டில் 2-ம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும் என்றும், அதன்படி, மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர், வந்தே பாரத் ரெயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில்  போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல பகுதிகளில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை 43.49 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை 2.05 கிலோ மீட்டருக்கும், பையப்பனஹள்ளியில் இருந்து கே.ஆர்.புரம் வரை 2.10 கிலோ மீட்டருக்கும் ரெயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த புதிய மெட்ரோ வழித்தடத்திற்கு திறப்பு விழா நடத்தப்படாமலேயே, கடந்த 9-ந்தேதி பொதுமக்கள் சேவைக்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக அதன் தொடக்க விழா நடைபெறும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கெங்கேரி-சல்லகட்டா, கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் அவர் அறிவித்து இருந்தார். அதன்படி, 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை நேற்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டனர். மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

2-ம் கட்ட நகரங்களுக்கும் விஸ்தரிப்பு

நாட்டில் மெட்ரோ ரெயில் மற்றும் நமோ ரெயில்கள் இயக்கப்படுவது புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. நொய்டா, காசியாபாத், மீரட், லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட முதன்மையான நகரங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல், பெங்களூரு மற்றும் மைசூரு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் நகரங்களாக மாற்றப்படும்.

நாட்டில் பல நகரங்களில் பாதுகாப்பான போக்குவரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தற்போது நாட்டில் 2-ம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையின் தேவை அதிகரித்துள்ளது. விரைவில் 2-ம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும். அதன்படி, மைசூரு நகரிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

மைசூருவுக்கு மெட்ரோ ரெயில்

நமது நாடு அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. சந்திரயான் திட்டம் மூலமாக நாம் நிலவில் புதிய சாதனையை படைத்துள்ளோம். உலகில் நமது நாடு பிரகாசிக்கிறது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதன் மூலம், உலகின் கவனம் நமது நாட்டை நோக்கி திரும்பி உள்ளது. ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்திருக்கிறோம்.

தற்போது நமோ பாரத் திட்டம் மூலமாக இயக்கப்படும் ரெயில்களில் சத்தம் குறைவாக இருக்கும். ஒரு இனிமையான பயணத்தை மேற்கொள்ளும் விதமாக இந்த ரெயில் சேவை இருக்கும். முதற்கட்டமாக டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நமோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எனக்கு சிறிய கனவு காண்பதில் விருப்பம் கிடையாது.

வந்தே பாரத் வெற்றி

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல நாடுகளில் இருக்கும் ரெயில்வே துறைக்கும், நமது நாட்டின் ரெயில்வே துறை எந்த அளவுக்கும் குறைந்தது இல்லை என்பது நிரூபணமாகும். நமோ பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஏற்கனவே தொடங்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. அம்ருத் பாரத், ஒந்தே பாரத் உள்ளிட்ட ரெயில் திட்டங்கள் தொடங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மக்கள் வரவேற்பு

கர்நாடகத்தில் பெங்களூருவில் மட்டுமே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடிப்படையாக மைசூருவிலும் விரைவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், மைசூரு மாநகர மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்