மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

சீனிவாசப்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற தொழிலாளி, தப்பிச்செல்ல முயன்றதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Update: 2023-09-12 22:04 GMT

கோலார்:

சீனிவாசப்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற தொழிலாளி, தப்பிச்செல்ல முயன்றதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

குடும்ப தகராறு

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா நம்பிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாகேஷ் என்ற தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ராதா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ராதா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் நம்பிஹள்ளி கிராமத்திலேயே தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு ஒரு டெய்லர் கடையும் அமைத்திருந்தார்.

2-வது திருமணம்

இந்த நிலையில் நாகேஷ் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகேஷ் தொடர்ந்து தனது முதல் மனைவியான ராதாவிடம் குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலையில் நாகேஷ் நம்பிஹள்ளி கிராமத்திற்கு சென்று தனது முதல் மனைவி ராதாவை சந்தித்தார்.

அப்போதும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராதா வீட்டுக்கு சென்று விட்டார். அதையடுத்து ராதாவின் வீட்டுக்கு சென்ற நாகேஷ், அங்கும் அவரிடம் தகராறு செய்தார்.

சரமாரி அரிவாள் வெட்டு

மேலும் ஆத்திரம் அடைந்த நாகேஷ், தன்னிடம் இருந்த அரிவாளால் ராதாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சந்தர்ப்பத்தில் நாகேசை தடுக்க வந்த அவரது மாமனார் முனியப்பா மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோரையும் நாகேஷ் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் நாகேசை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அவர்களையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.

சரண் அடைய மறுப்பு

இதனால் அவர்கள், நாகேசை சுற்றி வளைத்தனர். மேலும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், சீனிவாசப்பூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் நாகேசை சரண் அடைந்துவிடும்படி எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்தார். மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அப்போதும் நாகேஷ் சரண் அடைய மறுத்து ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் நாகேஷ் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கி குண்டு...

இதில் அவரது கை மற்றும் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அதையடுத்து போலீசார் நாகேசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சீனிவாசப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதுபோல் நாகேசால் தாக்கப்பட்ட அவரது மாமனார் முனியப்பா, மாமியார் மற்றும் நாத்தனாரும் சிகிச்சைக்காக சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு நாகேஷ் உள்பட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்