மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவர்கள் பரிசோதனை
மத்திய மந்திரி நிதின் கட்கரியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.;
கோப்புப்படம்
சிலிகுரி,
மத்திய மந்திரி நிதின் கட்கரி இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.
டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நிகழ்ச்சியின் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் டார்ஜிலிங்கில் உள்ள பாஜக எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.