10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ராஜ்நாத் சிங் இரங்கல்

படுகாயமடைந்த 7 வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2026-01-22 20:47 IST

புதுடெல்லி,

நாட்டின் குடியரசு தினம் வரும் 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தோடாவில் நடந்த துயரமான சாலை விபத்தில் 10 இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடினமான நேரத்தில் நமது ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்