ஜார்கண்டில் அதிரடி என்கவுண்டர்: தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் உள்பட 15 பேர் பலி
மாவோயிஸ்டு தலைவர் அனல் தா 1987-ம் ஆண்டு முதல் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் அனல் தா (எ) பதி ராம் மஞ்சி உள்ளிட்ட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சாரண்டா வனப்பகுதியில் உள்ள கும்படிஹ் கிராமத்தின் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் சிஆர்பிஎப் கோப்ரா பிரிவு மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் சுமார் 1,500 பேர் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் நெருங்குவதை அறிந்த மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இதற்குப் பதிலடியாகப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் மாவோயிஸ்டுகள் நிலைகுலைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் பதி ராம் மஞ்சி எனப்படும் 'அனல் தா'. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த இவர் மீது, ஜார்க்கண்ட் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது.
அனல் தா 1987-ம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர் . ஜார்க்கண்டின் சாரண்டா மற்றும் கோல்ஹான் பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பை வலுப்படுத்தியவர். இவர் மீது ஐஇடி வெடிகுண்டுத் தாக்குதல்கள், கொலை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த என்கவுண்டர் குறித்து ஜார்க்கண்ட் டிஜிபி ததாஷா மிஸ்ரா கூறுகையில்,
மாவோயிஸ்டுகளை ஒழிப்பதில் இது ஒரு மிகப்பெரிய வெற்றி. எங்களது வீரர்களின் துணிச்சலான நடவடிக்கையால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி நடுநிலையாக்கப்பட்டுள்ளார். கோல்ஹான் மற்றும் சரண்டா ஆகியவை ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. புடா பஹாட், சத்ரா, லதேஹர், கும்லா, லோஹர்டாகா, ராஞ்சி மற்றும் பரஸ்நாத் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளை திறம்பட குறைத்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த காலக்கெடுவுக்கு முன்னதாக நடந்துள்ள இந்த என்கவுண்டர், மாவோயிஸ்ட் அமைப்புக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது.