ஜார்க்கண்ட்: மூடப்படாத கேட்டை கடந்த லாரி மீது ரெயில் மோதி விபத்து

ரெயில்வே கிராசிங்கை வாகனங்கள் கடந்து செல்வதற்குள் ரெயில் மிக அருகில் வந்துவிட்டது.;

Update:2026-01-22 18:56 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள நவாத் பகுதி வழியாக கோண்டா-அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரெயில்வே கிராசிங்கில் ஏராளமான வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன.

இதனால் ரெயில்வே கேட் மூடப்படாத நிலையில் இருந்துள்ளது. மேலும் அந்த கிராசிங்கை கடந்து செல்வதற்கு ரெயிலுக்கு சிக்னல் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் கடந்து செல்வதற்குள் ரெயில் மிக அருகில் வந்துவிட்டது.

இந்த நிலையில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது ரெயில் மோதி நின்றது. இன்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்துவிட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி மீண்டும் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடர்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்