"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றிய பிறகுதான் எங்கள் பயணம் முடிவடையும்" - ராஜ்நாத்சிங் பேச்சு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றிய பிறகுதான் எங்கள் அரசின் பயணம் முடிவடையும் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Update: 2022-10-28 00:44 GMT

Image Courtesy : @rajnathsingh twitter

ஸ்ரீநகர்,

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. பாகிஸ்தானியருடன் போரிட காஷ்மீரில் இந்திய படைகள் நுழைந்தன. அந்த நாள், 'ஷவுரிய திவாஸ்' என்ற பெயரில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

நேற்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

"காஷ்மீர் ஒரு காலத்தில் பூலோக சொர்்க்கம் என்று அழைக்கப்பட்டது. ஆனால், சுயநல அரசியலுக்கு பலியானது. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு கூட சரியாக நடத்தப்படவில்லை. பாரபட்சமாக நடத்தப்பட்டது. நீண்ட காலமாக இருளில் வைக்கப்பட்டது.

ஒரே நாட்டில் 2 சட்டங்கள் அமலில் இருந்த ஆச்சரியமும் நிகழ்ந்தது. மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், பஞ்சாபை தாண்டி காஷ்மீருக்கு சென்றது இல்லை. ஆனால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, வளர்ச்சிக்கான புதிய விடியல் பிறந்துள்ளது.

காஷ்மீர், லடாக் ஆகியவை ஒன்றன்பின்ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் புதிய உயரத்தை தொட்டுள்ளது. இந்த பகுதிகளின் வளர்ச்சியை இப்போது தொடங்கி இருக்கிறோம். வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளோம். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்போம் என்று 1949-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி, நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கேற்ப, கில்கிட் மற்றும் பல்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் இதர பகுதிகளை நாம் கைப்பற்றுவோம். அதன்பிறகுதான் இந்த அரசின் பயணம் முடிவடையும்.

அதுபோல், 1947-ம் ஆண்டில் அகதிகள் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து, அவர்களது மூதாதையர் நிலம் மரியாதையுடன் திருப்பி அளிக்கப்பட்ட பிறகுதான் எங்கள் பயணம் நிறைவடையும்.

மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது. அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு உரிமை அளித்துள்ளது என்று நான் ேகட்க விரும்புகிறேன்.

அங்கு நடக்கும் மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு பாகிஸ்தானே முழு பொறுப்பு. அங்குள்ள மக்கள் மீதான அராஜகங்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது.

காஷ்மீரில் எத்தனை உயிர்கள் பறிபோனது, எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டன, மதத்தின் பெயரால் எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது என்பதற்கு கணக்கே கிடையாது.

சிலர் மதத்துடன் அரசியலை தொடர்புபடுத்துகிறார்கள். பயங்கரவாத செயலுக்கு இந்து என்றோ, முஸ்லிம் என்றோ பார்க்க தெரியுமா? பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில்தான் குறியாக இருப்பார்கள்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவமோ, போலீசோ ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறப்பட்டதாக சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள்.

அதே பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினரோ, பொதுமக்களோ தாக்கப்பட்டால், மனித உரிமை குறித்த கவலைகள் எங்கே போனது?"

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்