தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி அஜித் பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு

தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்கக் கோரி அஜித் பவார் தரப்பு மனு அளித்துள்ளது.

Update: 2023-07-05 10:32 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மராட்டிய சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் ஆஜராகினர்.

இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் பலப்பரீட்சை மராட்டிய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அதே சமயம் அஜித் பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய மராட்டிய சட்டமன்றத்தின் சபாநாயகர் ராகுல் நர்வேகாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக சரத் பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்