ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி

ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. நிறுவன நாள் விழாவில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.

Update: 2023-04-07 00:17 GMT

புதுடெல்லி,

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் 44-வது நிறுவன தின விழா, அந்தக் கட்சியினரால் நேற்று கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி நாளில் கொண்டாடப்பட்ட பா.ஜ.க. நிறுவன தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக நாம் இருக்கிறபோதும், நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை யாரும் தோற்கடித்து விட முடியாது. இது உண்மை.

குற்றச்சாட்டும், சதியும்

ஆளும் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர், சதி செய்கின்றனர். இப்படிச்செய்கிறவர்கள், வெறுப்பும் விரக்தியும் நிறைந்தவர்கள்.

மோடிக்கு கல்லறை தோண்டப்படும் என்று வெளிப்படையாகவே கூறுகிற அளவுக்கு இன்றைக்கு அவர்கள் அவநம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், ஏழைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆதரவும் தாமரையை தொடர்ந்து பாதுகாத்து, அது மலர உதவும்.

ஊழலை விடுவிக்க கடும் நடவடிக்கை

நாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதுடன் முடங்கி விடக்கூடாது. நமது இலக்கு, கோடானு கோடி மக்களின் இதயங்களை வெல்வதுதான். ஜனசங்க காலத்தில் இருந்து நாம் செய்கிற கடினமான உழைப்புடன், ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறோம்.

ஊழல், சொந்த பந்தத்துக்கு ஆதரவான நிலை, சட்டம்- ஒழுங்கு சவால்கள் ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு அரசு கடுமையாகச் செயல்படும். ஊழலை ஒழிப்பதற்கான உத்வேகத்தை அனுமனிடம் இருந்து பா.ஜ.க. பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சி மீது தாக்கு

இலவச ரேஷன் திட்டம், சுகாதார காப்பீடு, பிற நலத்திட்டங்களை நிறைவேற்றுவதுதான் பா.ஜ.க.வின் சமூக நீதி. ஆனால் பிற கட்சிகள், சமூகத்துக்கு உதவாமல், தங்கள் சொந்தக் குடும்பங்களின் நலன்களை முக்கியமாகக் கொண்டு செயல்படுகின்றன. பா.ஜ.க. பெரிதாக கனவு காண்பதிலும், பெரிய இலக்குகளை அடைவதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறது.

அரசியல் சாசனத்தின் பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்தது இல்லை. அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. செய்கிற வேலைகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஜனநாயக கருவறையில் பிறந்த கட்சி

ஜனநாயக கருவறையில் இருந்து பிறந்த கட்சி பா.ஜ.க. அது ஜனநாயக அமிர்தத்தை ஊட்டி வளர்த்த கட்சி. நாட்டுக்காக இரவு பகலாக பா.ஜ.க. உழைக்கிறது.

முதலில் நாடு என்பதுதான் நமது மந்திரமாகக் கொண்டிருக்கிறோம். அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்துடன் பா.ஜ.க. உழைக்கிறது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்