மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் வெளியானது; தியேட்டர்களை திருவிழா கோலமாக்கிய ரசிகர்கள்

மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படம் நேற்று வெளியானது. இந்த படம் வெளியான தியேட்டர்களை அவரது ரசிகர்கள் திருவிழா கோலமாக்கினர்.

Update: 2022-10-28 18:45 GMT

பெங்களூரு:

புனித் ராஜ்குமார்

கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி கர்நாடக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் இறுதியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் புனித்ராஜ்குமார், தனது கனவு படமான 'கந்ததகுடி' என்ற ஆவணப்படத்தில் நடித்து இருந்தார். புனித் ராஜ்குமார் நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

'கந்ததகுடி' படம் வெளியானது

கந்ததகுடி ஆவணப்படம் அக்டோபர் 28-ந்தேதி (நேற்று) ெவளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் புனித்ராஜ்குமார் நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தங்களின் ஆசை நாயகனை திரையிலாவது பார்த்திட வேண்டும் என்று தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். மாநிலத்தில் 'கந்ததகுடி' படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ரசிகர்கள், 'கந்ததகுடி' படத்தை திருவிழா போல கொண்டாடினார்கள். தியேட்டர்கள் முன்பு புனித் ராஜ்குமாரின் கட்-அவுட்டுகள் வைத்தும், பேனர் வைத்தும் மகிழ்ந்தனர். மேலும் தோரணமும் கட்டியிருந்தனர். இதனால் தியேட்டர்களை ரசிகர்கள் திருவிழா கோலமாக்கினர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

பெங்களூரு மட்டுமின்றி சித்ரதுர்கா, தார்வார், உப்பள்ளி, ைமசூரு, ராமநகர், துமகூரு, கோலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் 'கந்ததகுடி' படம் பார்க்க குவிந்தனர். டொள்ளு குனிதா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தியேட்டர் முன்பு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

மேலும் தியேட்டர்கள் முன்பு வைத்திருந்த புனித்ராஜ்குமாரின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 'கந்ததகுடி' படம் வெளியான தினம் தங்களுக்கு தீபாவளி என்று தியேட்டர்கள் முன்பு பலர் பட்டாசுகளை வெடித்தனர். மேலும் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒரு சில பகுதிகளில் ரசிகர்கள் மக்களுக்கும், படம் பார்க்க வந்தவர்களுக்கும் சிக்கன் பிரியாணியும் வழங்கினர்.

நடிகர் சுதீப்

ரசிகர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி கன்னட திரையுலகை சேர்ந்த மற்ற நடிகர்-நடிகைகளும் 'கந்ததகுடி' படத்தை பார்த்து டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து புனித் ராஜ்குமாரை நினைவுகூர்ந்து வருகிறார்கள். நடிகர் கிச்சா சுதீப் தனது டுவிட்டர் பதிவில், 'புனித் குடும்பத்தினருக்கும், கந்ததகுடி பட குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். புனித் எப்போதும் போல பிரகாசிக்கட்டும். அஸ்வினிக்கு வாழ்த்துகள். நீங்கள் உண்மையிலேயே அனைத்தையும் தாங்கி கொண்டீர்கள். அனைத்து புனித் ரசிகர்களுக்கு எனது அரவணைப்பு மற்றும் அன்பை தெரிவித்து கொள்கிறேன். கந்ததகுடி அனைவருக்கும் விருந்து' என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீர் சிந்திய ரசிகர்கள்

திரையில் தங்கள் ஆசை நாயகனை பார்த்ததும் ஏராளமான ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'அப்பு, அப்பு...' என கரகோஷம் எழுப்பி கண்ணீர் சிந்தினர். மேலும் 'மிஸ் யூ அப்பு...' என அனைவரும் கோஷம் எழுப்பினர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களும் புனித்ராஜ்குமாரின் படத்தை கையில் ஏந்தி கண்ணீர் விட்டு அழுதனர். புனித்ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி பெண்கள், மூதாட்டிகள், வாலிபர்கள் என ஏராளமானோர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து அழுதப்படி சென்றதை பார்க்க முடிந்தது. தங்கள் ஆசை நாயகனை இனி எப்போது பார்ப்போம் என்ற கவலையில் பலர் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்