பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-03-23 08:36 GMT

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள குஜ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 20-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்று இரவே சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து கடந்த 21-ந் தேதி காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இது சங்ரூர் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று விஷ சாராயம் குடித்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.  கைது செய்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதால் இது தொடர்பாக பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யிடம் தேர்தல் ஆணையம் உடனடி பதிலை கோரியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்