தொடர் கனமழை எதிரொலி: கார் மீது மரம் சாய்ந்து விழுந்து தந்தை-மகன் சாவு

தொடர் கனமழை எதிரொலியாக கார் மீது மரம் சாய்ந்து விழுந்து தந்தை-மகன் பலியானார்கள். மேலும் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Update: 2022-08-05 20:49 GMT

பெங்களூரு:

தொடர் கனமழை எதிரொலியாக கார் மீது மரம் சாய்ந்து விழுந்து தந்தை-மகன் பலியானார்கள். மேலும் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கோவில் மூழ்கியது

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. தொடர் கனமழையால் சர்ஜாபுரா ரோட்டில் ஒரு ஏரி உடைந்து குடியிருப்பை கடந்த 4 நாட்களாக தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்களை டிராக்டர் மூலம் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரையும் அகற்றும் பணி நடந்து வருகிறது. பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே சிவகங்கே மலையில் உள்ள பாதாளகங்கே கோவில் மூழ்கியுள்ளது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுதவிர துமகூரு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கொரட்டகெரே அருகே மாவூர்கெரே கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உள்ளது.

சாலை துண்டிப்பு

ராமநகர் மாவட்டம் அம்பாடஹள்ளி கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. கன்வா அணையும் நிரம்பி உள்ளது. அந்த கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. விஜயாப்புரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் விஜயாப்புரா-பாகல்கோட்டை, விஜயாப்புரா-பெலகாவி, விஜயாப்புரா-தார்வார் பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம் மான்வியில் கனமழை பெய்து வருகிறது. மான்வி அருகே குட்ரி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயியான வெங்கடேஷ் என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார். அவரது உடலை தேடும் பணி தொடாந்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பயிர்களும் அடித்து செல்லப்பட்டது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சாவு

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மீனியம், தொட்டேஹல்லா கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். சாம்ராஜ்நகர் அருகே சந்தேமரஹள்ளி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று கார் மீது சாய்ந்து விழுந்தது. இதில் காரில் இருந்த தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் ஹொன்னூர் கிராமத்தை சேர்ந்த ராஜு(வயது 49), இவரது மகன் சரத்(22) என்பது தெரியவந்தது. மேலும் குடகு மாவட்டத்திலும் கனமழை கொட்டுகிறது.

இதனால் பாகமண்டலா, திரிவேணி சங்கமம் பகுதியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

94,963 கனஅடி செல்கிறது

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 123.86 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 65,733 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 79,963 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14,187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 94,963 கனஅடி தண்ணீர் தமிழகம் நோக்கி அகண்ட காவிரியாக செல்கிறது. மண்டியாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்