நுபுர் சர்மா பேசியதை தான் சாகிர் நாயக்கும் கூறினார்... அவருக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லவில்லை - ராஜ் தாக்கரே அதிரடி

நுபுர் சர்மா பேசியதை தான் சாகிர் நாயக்கும் கூறினார்... அவருக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லவில்லை என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-23 14:39 GMT

மும்பை,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் நவநிர்மான் சேனா கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்றார்.

கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா பேசியபோது அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வைக்கப்பட்டார். நீங்கள் சாகிர் நாயக்கின் பேட்டிகளை பாருங்கள். அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் அவரும் அதே விஷயத்தை (இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா கூறிய கருத்து) தான் கூறினார். அவருக்கு எதிராக யாரும் எதுவும் கூறவில்லை. அவர் மன்னிப்புகேட்க அறிவுறுத்தப்படவில்லை.

அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள்... ஒருவர் நமது கடவுள் (இந்து மத கடவுள்) குறித்து பேசுகிறார். அவர் கூறிய கடைசி வாக்கியம் என்ன? 'அவர்கள் கடவுள்களுக்கு எவ்வளவு மோசமான பெயர்களை அவர்கள் வைத்துள்ளனர்' நமது கடவுள்களின் பெயர்கள் மோசமாக உள்ளனவா?... இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டுமென அவரிடம் யாரும் கேட்கவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்