சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்துவதில் உறுதி - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதில் தேர்தல் கமிஷன் உறுதிபூண்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Update: 2023-10-01 22:54 GMT

Image Courtacy: ANI

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வின்போது தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டுகள், அரசு அதிகாரிகள் என பல்வேறு துறையினருடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மேலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.

நேர்மையான தேர்தல்

இந்த ஆய்வுப்பணிகளை முடித்தபின் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.73 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 604 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்கி உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 18,462 பேர் 100 வயதை கடந்தவர்கள் ஆவர்.

மாநிலத்தில் உள்ள 51,756 வாக்குச்சாவடிகளில் 1,600-ல் பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர். 200 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளும், 1,600-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களும் தேர்தல் பணிகளை மேற்கொள்வர்.

மாநிலம் முழுவதும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்யும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 75 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டில் இருந்தே வாக்களிப்பு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது குற்றவழக்குகள் இருந்தால் அதை செய்தித்தாள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். அதேநேரம் அவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்த காரணத்தை அரசியல் கட்சிகளும் வெளியிட வேண்டும்.

தேர்தலில் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது.

மாநில எல்லைப்பகுதிகளில் குறிப்பாக பஞ்சாப், அரியானா எல்லைகளில் மது மற்றும் பணம் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தேர்தலில் வாக்களிப்பை கட்டாயமாக்கும் நடைமுறை எதுவும் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்ற பரிந்துரை எதுவும் தேர்தல் கமிஷனிடம் இல்லை என அவர் மறுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்