பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சிங் நியமனம்

பெங்களூரு வளா்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சிங்கை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-08 21:21 GMT

பெங்களூரு:

பெங்களூரு வளா்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சிங்கை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராகேஷ் சிங் நியமனம்

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த மே மாதம் பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மந்திரி பதவி கிடைக்காததால் மூத்த எம்.எல்.ஏ.க்கள் ஜெயச்சந்திரா, கிருஷ்ணப்பா, என்.ஏ.ஹாரீஷ் உள்ளிட்ட பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரம் மிக்க பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைவர் பதவியை கைப்பற்ற அவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தனக்கு பி.டி.ஏ. தலைவர் பதவியாவது வழங்க வேண்டும் என்று ஜெயச்சந்திரா பகிரங்கமாக கூறினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடக நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம்

பெங்களூரு வளர்ச்சி ஆணையம் மட்டுமின்றி ஆனேக்கல் திட்ட ஆணையம், ஒசக்கோட்டை திட்ட ஆணையம், பெங்களூரு சர்வதேச விமான நிலைய பகுதி மேம்பாட்டு ஆணையம், தொட்டபள்ளாபுரா திட்ட ஆணையம், மாகடி திட்ட ஆணையம், சன்னபட்டணா திட்ட ஆணையம், கனகபுரா திட்ட ஆணையம், நெலமங்களா திட்ட ஆணையம், புறநகர் வெளிவட்டச்சாலை திட்ட ஆணையம், பெங்களூரு-பிடதி ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆணைய தலைவராகவும் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை அடுத்து பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் பதவியை எதிர்பாா்த்து காத்திருந்த காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். பொதுவாக அந்த ஆணைய தலைவர் பதவி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும். இந்த முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்