லக்கிம்பூர் கேரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

லக்கிம்பூர் கேரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Update: 2022-09-28 12:12 GMT

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, லக்கீம்பூர் கேரி பகுதியில் ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வந்தபோது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு லக்னோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை செய்யும்படியும், நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படியும், காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சைக்கு வேண்டிய முறையான ஏற்பாடுகளை செய்து தரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உத்தர பிரதேசம், லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்து குறித்து அறிந்து துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்