இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகம்; சவுதியை பின்னுக்கு தள்ளி 2-வது இடம்பிடித்த ரஷியா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதியை பின்னுக்கு தள்ளி ரஷியா 2-வது இடம்பிடித்துள்ளது.

Update: 2022-06-13 16:22 GMT

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா 110-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளை, போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அதேவேளை, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், எரிபொருளை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருகின்றன.

இதனிடையே, உக்ரைன் மீதான போர் காரணமாக தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் நோக்கில் ரஷியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷியா தனது பொருளாதார நிலைப்பாட்டில் வலுவாக உள்ளது.

குறிப்பாக, கச்சா எண்ணெய்யை அதன் நட்பு நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷியா விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா அதிகரித்துள்ளது.

நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு ரஷியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வருகிறது. சந்தை மதிப்பில் இருந்து கச்சா எண்ணெய் பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷியா விநியோகம் செய்து வருகிறது.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதில், இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஈராக் முதல் இடத்திலும், சவுதி அரேபியா 2-வது இடத்திலும் இருந்து வந்தது.

ஆனால், உக்ரைன் மீது தொடங்கிய பின் இந்தியாவுக்கு ரஷியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் விநியோகம் செய்து வருகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் ரஷியாவிடமிருந்து இந்தியா 25 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. இது இந்தியாவின் கடந்த மாத மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 16 சதவீதம் ஆகும்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கிப்லீர் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷியாவிடமிருந்து இந்தியா தினமும் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது. இந்த கொள்முதல் ஏப்ரல் மாதம் தினமும் 3.70 லட்சம் பேரலாகவும், மே மாதம் தினமும் 8.70 லட்சம் பேரலாகவும் அதிகரித்தது.

கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் நடப்பு ஜூன், மேலும் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 6 மாதங்களை சேர்ந்து இந்தியாவுக்கு ரஷியா 66.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவு 2021-ம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவை விட அதிகமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்