மசோதாக்கள் விவகாரம்.. முதல்-மந்திரியை சந்தித்து பேசுங்கள்: கேரள கவர்னருக்கு ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்றம்

மசோதாக்கள் மீது கேரள கவர்னர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர்.

Update: 2023-11-29 08:54 GMT

புதுடெல்லி:

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில் கவர்னர் கால தாமதம் செய்து வருவதாகவும், இது மக்களின் உரிமைகளை பறிப்பதாகவும் கேரள அரசு தனது மனுவில் கூறியிருந்தது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது உரிய காலக்கெடுவில் கவர்னர் ஒப்புதல் வழங்கவேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கவர்னர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கேரள அரசு குறிப்பிட்ட 8 மசோதாக்களில் 7 மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இவ்வாறு 8 மசோதாக்கள் மீதும் கவர்னர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர். அத்துடன் இந்த விஷயத்தில் முதல்-மந்திரி மற்றும் மசோதாக்கள் தொடர்புடைய மந்திரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்