ராஜஸ்தானில் வாட்டி வதைக்கும் வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-05-26 13:01 GMT

Image Courtesy : ANI

ஜெய்ப்பூர்,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே சமயம், வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ராஜஸ்தானின் பலோடி பகுதியில் நேற்று 50 டிகிரி செல்சியஸ் வெப்ப அலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜெய்சால்மரில் 48 டிகிரி, பைகானேரில் 47.2 டிகிரி, ஜோத்பூரில் 46.9 டிகிரி, கோட்டாவில் 46.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதே சமயம் டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்றும், நாளை முதல் வரும் 29-ந்தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வரும் 30-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்