பயங்கரவாதி ஷாரிக்கிற்கு இன்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் பயங்கரவாதி ஷாரிக்கிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

Update: 2022-12-19 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் பயங்கரவாதி ஷாரிக்கிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

பலத்த பாதுகாப்பு

கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து இருந்தது. இந்த சம்பவத்தில் குக்கர் குண்டை எடுத்து சென்ற பயங்கரவாதியான ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து இருந்தனர். ஷாரிக்கிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷாரிக்கின் தீக்காயம் 80 சதவீதம் குணமானது. இதற்கிடையே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க அரசு சிபாரிசு செய்தது.

அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து ஷாரிக்கிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் அனுமதியின்பேரில் மங்களூருவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷாரிக்கிற்கு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் வைத்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இன்று அறுவை சிகிச்சை

இந்த நிலையில் ஷாரிக்கின் 2 கைகள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த தீக்காயம் இன்னும் ஆறவில்லை. இதனை சரிசெய்ய டாக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து கைகள், மார்பு பகுதியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இந்த அறுவை சிகிச்சை முடிந்ததும் ஓரிரு நாட்களில் ஷாரிக் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், அதன்பிறகு அவரை தங்களது காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்