பொய் பேசுவதே பா.ஜனதாவினரின் வேலை - சித்தராமையா

பொய் பேசுவதே பா.ஜனதாவினரின் வேலை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2022-10-13 22:23 GMT

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏற்க மாட்டார்கள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா ஆகியோரின் சுற்றுப்பயணத்தில் என்னை குறியாக வைத்து விமர்சனம் செய்கிறார்கள். எது பேசுவதாக இருந்தாலும், புள்ளி விவரங்களை வைத்து கொண்டு பேசினால் அதற்கு மதிப்பு கிடைக்கும். ஆனால் எந்த புள்ளி விவரமும் இல்லாமல் வெறுமனே குற்றம்சாட்டுவதை கர்நாடக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் ஆவணங்களை எடுத்து பார்த்து அதை தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து பசவராஜ் பொம்மை பொய் பேசுவது சரியல்ல. இங்கு அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஆட்சி செய்கிறார்கள்.

இடஒதுக்கீடு

தேசப்பிதா காந்தியை கொன்றவர்கள் எப்படி தேசபக்தர்கள் ஆக முடியும்?. இட ஒதுக்கீட்டையும், தலித் மக்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்குவதையும் எதிர்த்தவர்கள் பா.ஜனதாவினர். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது தலித் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. புதிய சட்டம் கொண்டு வந்து தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை கொண்டு வந்தேன்.

அரசின் திட்ட பணிகளை ஒதுக்குவதில் தலித் காண்டிராக்டர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினேன். மாணவர் விடுதிகளுக்கு மெத்தை, தலையணை கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக பசவராஜ் பொம்மை சொல்கிறார். அதிகாரிகள் தவறு செய்தனர். ஆனால் அந்த அதிகாரிகளை அந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் தப்பிக்க வைத்துள்ளார்.

பொய் பயணம்

பா.ஜனதாவினரின் சாதனை திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே. பொய் பேசுவதையே மட்டுமே பா.ஜனதாவினர் வேலையாக கொண்டு செயல்படுகிறார்கள். பா.ஜனதாவின் சுற்றுப்பயணம் பொய் பயணம் என்று மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் எதிர்பாா்த்து காத்திருக்கிறார்கள். இது பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பாவுக்கு புரிந்தால் நல்லது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்