கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 83.89 சதவீதம் பேர் தேர்ச்சி

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 83.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவ, மாணவிகள் 625 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-05-08 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 83.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவ, மாணவிகள் 625 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியில் இருந்து ஏப்ரல்15-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 35 ஆயிரத்து 102 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். கடந்த மாதம் (எப்ரல்) 24-ந் தேதியில் இருந்து கடந்த 3-ந் தேதி வரை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்றிருந்தது.

அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அலுவலகத்தில் கர்நாடக பள்ளி தேர்வு வாரியத்தின் தலைவர் ராமநாதன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது:-

83.89 மாணவ-மாணவிகள் தேர்ச்சி

மாநிலத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 102 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். பள்ளிகளில் நேரடியாக படித்து முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 87.76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் சராசரியாக 83.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 7 லட்சத்து 619 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2021-22-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2 சதவீதம் தேர்ச்சி குறைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். எப்போதும் போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரத்து 968 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 80.08 சதவீதமாக உள்ளது.

கிராமப்புறங்களில் அதிக தேர்ச்சி

அதுபோல், 4 லட்சத்து 9 ஆயிரத்து 134 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 511 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 87.87 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 89.98 சதவீத மாணவிகளும், 80.62 சதவீத மாணவிகளும் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த தேர்வில் நகர்ப்புறங்களில் 79.62 சதவீத மாணவ, மாணவிகளும், கிராமப்புறங்களில் 87 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டும் கிராமப்புறங்களிலேயே தேர்ச்சி அதிகமாக உள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 86.74 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 85.64 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 90.89 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

4 பேர் சாதனை

குறிப்பாக 625-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து 4 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மேலும் முதல் மொழி பாடத்தில் 125-க்கு 125 மதிப்பெண்கள் எடுத்து 14 ஆயிரத்து 983 மாணவ, மாணவிகளும், 2-வது மொழி பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து 9,754 பேரும், 3-வது மொழி பாடத்தில் 16,170 பேர் 100 மதிப்பெண்களும், கணிதத்தில் 2132 மாணவ, மாணவிகளும், அறிவியலில் 983 பேரும், சமூக அறிவியலில் 8311 மாணவ, மாணவிகளும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் தேர்வு எழுதிய 58 மாணவ, மாணவிகளில், 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,517 அரசு பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,824 தனியார் பள்ளிகளிலும் 100 சதவீத மாணவ, மாணவிகள் 100 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக அரசு, அரசு உதவி பெறும், தனியார் என 34 பள்ளிகளில் எந்த மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடையவில்லை.

சித்ரதுர்கா முதலிடம்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 4,649 பேர் தேர்வு எழுதி இருந்தார்கள். அவர்களில் 3723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே சித்ரதுர்கா மாவட்டம் 96.80 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள மண்டியா மாவட்டம் 96.74 சதவீதமும், 3-வது இடத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் 96.68 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடைசி இடத்தில் யாதகிரி மாவட்டம் உள்ளது. அங்கு 75.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு வடக்கு மண்டலம் 32-வது இடத்தையும், பெங்களூரு தெற்கு 33-வது இடத்திலும் உள்ளது.

மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மறு கூட்டலுக்கு இன்று முதலே (அதாவது நேற்று) விண்ணப்பிக்கலாம். வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும்.வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும்.

அதுபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மறுத்தேர்வுக்கு இன்று (நேற்று) முதல்விண்ணப்பிக்கலாம். வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும். மறுத்தேர்வுக்கான நடத்துவதற்கான பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்