ஒலேநரசிபுராவில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது

ஒலேநரசிபுராவில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-24 18:45 GMT

சிவமொக்கா-

ஒலேநரசிபுராவில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்தி சிலை சேதம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேநரசிபுராவை அடுத்த ஹோலேஹனூர் பகுதியில் மகாத்மா காந்தி சிலை ஒன்று உள்ளது. கடந்த 21-ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அந்த காந்தி சிலையை அடித்து உடைத்துவிட்டு சென்றனர். இதில் சிலை அதிகளவு சேதம் அடைந்தது. மறுநாள் காலை இதை பார்த்த கிராம மக்கள், காந்தி சிலை உடைப்பிற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், காந்தி சிலையை உடைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

2 பேர் கைது

மேலும் இதுகுறித்து ஒலேநரசிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக காந்தி சிலை அமைந்துள்ள இடத்தை சுற்றி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து காந்தி சிலையை சேதப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அந்த நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பந்தரஹள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 24), வினய் (25) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளிகளான இவர்கள் கடந்த 21-ந் தேதி இரவு ஜோக் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்காக வந்தனர். அப்போது ஹோலேஹனூர் பகுதியில் உள்ள காந்தி சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

இதையடுத்து அவர்கள் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு செல்லாமல், வீட்டிற்கு திருப்பினர் என்று தெரியவந்தது. இதனால் அவர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது வேறு எந்த அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கைதான 2 பேரிடமும் ஒலேநரசிபுரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்