தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர்: இண்டர்போல் அளித்த தகவல் - விரைந்து சென்று மீட்ட போலீசார்
கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை போலீசார் மீட்டனர்.;
கோப்புப்படம்
மும்பை,
மும்பையின் மாலட் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு வேலையிழந்துள்ளார். தொடர்ந்து வேறு வேலைக்கு முயற்சி செய்துவந்த அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயின் ஜாமீன் செலவுகளுக்கு அவரால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இந்த காரணங்களால் விரக்தியடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று பலமுறை தேடியுள்ளார். இந்த நிலையில் கூகுளை கண்காணிக்கும் இண்டர்போல் அதிகாரிகள், இதுகுறித்து மும்பை போலீசாருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்தனர்.
அந்த நபர் தனது இணையத் தேடலின்போது பயன்படுத்திய மொபைல் எண்ணையும் பகிர்ந்தனர். இந்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மணிநேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்து தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். மேலும் அவருக்கு வேலை தேடித் தருவதாக உறுதியளித்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.