பிரஜ்வல் ரேவண்ணா உடனே நாடு திரும்பி வர வேண்டும்; இல்லையென்றால்..தேவகவுடா எச்சரிக்கை

எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக திரும்பி வர வேண்டும் என்றும், பிரஜ்வல் ரேவண்ணா போலீசார் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-05-23 13:41 GMT

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் நான் முதல் முறையாக கடந்த 18-ந் தேதி பேசி இருந்தேன். அவர் எனக்கும், குடும்பத்தினருக்கும், எனது நண்பர்கள், கட்சி தொண்டர்களுக்கும் தொந்தரவும், வேதனையும் கொடுத்திருந்தார். அந்த வேதனையில் இருந்து வெளியே வந்து பேசுவதற்கு எனக்கு சிறிது நாட்கள் தேவைப்பட்டது. சட்டத்தில் இருந்து தப்பிக்க நினைத்தால், அதைவிட மிகப்பெரிய தண்டனை கிடைக்க வேண்டும்.

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் என்னுடைய நிலைப்பாட்டை, ஏற்கனவே முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் வெளியான பின்பு கடந்த சில வாரங்களாக என்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும் மக்கள் அவமானப்படுத்தி பேசுகிறார்கள். அவர்களது பேச்சை நிறுத்தும் முயற்சியில்  ஈடுபட மாட்டேன். அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறவும் விரும்பவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.

பிரஜ்வல் ரேவண்ணாவை பாதுகாக்கும் முயற்சியில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு சென்றது, அவனது மற்ற செயல்பாடுகள் குறித்தும் எனக்கு தெரியாமல் தான் இருந்தது.பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும், உடனடியாக திரும்பி வர வேண்டும். போலீசார் முன்பாக சரண் அடைந்து, இந்த வழக்குகளின் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும். எந்த பாரபட்சமும் இல்லாமல் இதனை கூறுகிறேன். இது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை என்று கூட வைத்து கொள்ளலாம்.

என் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தால், நான் விடுத்த எச்சரிக்கையை ஏற்று பிரஜ்வல் ரேவண்ணா போலீசார் முன்பாக சரண் அடைய வேண்டும். நானாக இருக்கட்டும், எனது குடும்பமாக இருக்கட்டும், இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம். அவனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே எனக்கு முக்கியம்.என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை திரும்ப பெறுவதே எனது நோக்கம். ஏனெனில் எனது அரசியல் வாழ்க்கையில் என்னுடன் இருந்தவர்கள் இந்த மக்கள் தான். நான் உயிரோடு இருக்கும் வரை, அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன்" இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்