போதை விருந்து விவகாரம்: நடிகை ஹேமாவுக்கு நோட்டீஸ் - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

நாளைக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி நடிகை ஹேமா உள்பட 5 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Update: 2024-05-25 22:13 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு கடந்த 19-ந் தேதி மதுவிருந்து நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைவிருந்து நடைபெற்றது தெரியவந்தது. மேலும் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களும் சிக்கின. போதை விருந்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்தனர்.

அதில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாசு, போதைப்பொருள் வியாபாரிகள் 3 பேர் என ஒட்டுமொத்தமாக 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் போதை விருந்தில் பங்கேற்றது உறுதியானது. அவர்கள் போதை விருந்தில் பங்கேற்கவில்லை என கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் ஒட்டுமொத்தமாக நடிகைகள் உள்பட 86 பேர் போதைபொருட்களை பயன்படுத்தி இருந்தது உறுதியானது.

இந்த விவகாரம் பெங்களூரு மட்டுமின்றி தெலுங்கு திரைஉலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பண்ணை வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு 2 சொகுசு கார்கள் நின்றன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில் ஒரு காரில் ஆந்திர எம்.எல்.ஏ.வின் பாஸ் ஒட்டப்பட்டு இருந்தது. எனவே போதை விருந்தில் ஆந்திர அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த், மக்கள் பிரதிநிதிகள் யாரும் இதில் சிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த நிலையில் பாசுடன் நின்ற கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த பூர்ணா ரெட்டி என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஆந்திர மந்திரி கோவர்த்தன் ரெட்டியின் ஆதரவாளர் ஆவார்.

அவர், சோதனையின்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பித்தவர்களில் ஒருவர் ஆவார். போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அருண் குமார் என்பவரையும் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அருண் குமார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஸ்ரீகாந்த் ரெட்டியின் ஆதரவாளர் ஆவார். இவர்கள் 2 பேரிடமும் போலீசார் போதை விருந்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அருண் குமார், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும், எம்.எல்.ஏ. ஸ்ரீகாந்த் ரெட்டியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் போதை விருந்து நிகழ்ச்சி தொடர்பாக கைதான வாசு, அருண் குமார், நாகபாபு, ரன்பீர், முகமது அபுபக்கர் ஆகிய 5 பேரின் வங்கி கணக்குகளை குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் அதில் நடைபெற்ற பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை விருந்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகை ஹேமா உள்பட 5 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் நாளைக்குள்(27-ந் தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராகும்பட்சத்தில், கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்