பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி இன்னும் முடிவாகவில்லை; எடியூரப்பா திடீர் 'பல்டி'

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்று எடியூரப்பா திடீரென்று பல்டி அடித்துள்ளார்.

Update: 2023-09-10 18:45 GMT

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பதாகவும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க உள்துறை மந்திரி அமித்ஷா ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த குமாரசாமி, "பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவாகவில்லை" என்றார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், இதே கருத்தை தான் கூறியுள்ளார். இந்த நிலையில் எடியூரப்பா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து நான் பேசியபோது கூட்டணி இறுதியாகவில்லை. இப்போதும் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வேறு நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார்கள். இந்த கூட்டணி குறித்து இன்னும் 2, 3 நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது" என்றார்.

நேற்று முன்தினம் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்துவிட்டதாகவும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய எடியூரப்பா, தற்போது திடீரென்று பல்டி அடித்து கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என கூறி உள்ளார்.

பா.ஜனதாவுக்கு கடந்த 2019-ம் ஆண்ைட ஒப்பிடும்போது தற்போது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பா.ஜனதா விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்