ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-06-04 01:15 GMT

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள ரிஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். அவர்கள் உடனடியாக ஸ்ரீ நகரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில், சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் அமர்ந்திருந்த வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பலத்த காயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

மேலும், சோபியானில் இன்று கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். 

Tags:    

மேலும் செய்திகள்