திருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்
மந்திரியை தாக்கியதாக 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் மந்திரி சபையில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு மாநிலத்தின் கலிலாபாத் அருகேயுள்ள சந்த் கபீர் நகர் பகுதிக்கு நேற்று இரவு சென்றார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர், சஞ்சய் நிஷாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் போது திடீரென அவர்கள் சஞ்சய் நிஷாத்தை தாக்கினர். இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதுடன், மூக்கு கண்ணாடியும் உடைந்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.