வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். பட பாணியில் உ.பி.யில் தேர்வு முறைகேடு; 14 பேர் கைது

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வருவது போன்று உத்தர பிரதேசத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-27 15:21 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து அதிகாரி, கிராம வளர்ச்சி அதிகாரி மற்றும் சமாஜ் கல்யாண் பாரியவேக்சக் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் நடந்தன. 20 மாவட்டங்களில் 737 தேர்வு மையங்களில் நடந்த இந்த தேர்வில் ஆள்மாறாட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன.

இந்த நிலையில், உத்தர பிரதேச சிறப்பு அதிரடி படைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அவர்கள் தேர்வு மையங்களுக்கு திடீர் சோதனை செய்ய நேரில் சென்றனர்.

இதில், ஆள்மாறாட்டத்தில் சிலர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன்படி 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். பட பாணியில் செயல்பட்டு உள்ளார்.

தேர்வு எழுதும்போது, காதில் புளூடூத் எனப்படும் உபகரண உதவியுடன் அவர் தேர்வை எழுதி கொண்டிருந்தது தெரிய வந்தது. அவருடைய காதில், சிறிய அளவிலான பார்ப்பதற்கு புலப்படாத ஒரு கருவியை மறைத்து வைத்து உள்ளார். அதனை அதிகாரிகள் கஷ்டப்பட்டு வெளியே எடுத்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் லக்னாவூர், கோமதி நகர் விரிவாக்கம் மற்றும் பரேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பிடிபட்டு உள்ளனர். நிறைய பணம் பெற்று கொண்டு அவர்கள் இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்