2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் சிகாரிப்புராவில் விஜயேந்திரா போட்டி; மகனுக்காக விட்டுகொடுத்தார் எடியூரப்பா

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2022-07-22 16:13 GMT

சிவமொக்கா:

எடியூரப்பா

கர்நாடக அரசியலில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் எடியூரப்பா. தென்இந்தியாவில் பா.ஜனதா வலுவாக காலூன்ற இவர் முக்கிய காரணமாக இருந்தார். முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு (2021) அந்த பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாமல் எடியூரப்பா ஒதுங்கியே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது இளைய மகன் விஜயேந்திராவை எடியூரப்பா முன்னிலை படுத்தி வந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவின் வாரிசான விஜயேந்திராவை முன்னிலை படுத்த தயக்கம் காட்டி வந்தது. ஆனாலும் எடியூரப்பாவின் உறுதியான முடிவால் விஜயேந்திரா, கர்நாடக கட்சியின் பா.ஜனதா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

விஜயேந்திரா போட்டி

இந்த நிலையில், கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் எடியூரப்பா போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுந்தது. மேலும் அவர் போட்டியிட மாட்டார் என்றும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தனது சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும், அவருக்கு மக்கள் தன்னை போலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடியூரப்பா, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். சிகாரிப்புரா தொகுதியில் எனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார். என்னை போல் அவருக்கும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

அரசியலில் இருந்து ஓய்வா?

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போது அவர் போட்டியிடவில்லை. சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பா 6 முறை போட்டியிட்டு ெவற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். தற்போது தனது தொகுதியை மகனுக்காக விட்டு கொடுத்துள்ளார்.

இதனால் எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது. ஏற்கனவே எடியூரப்பாவின் மற்றொரு மகன் ராகவேந்திரா, சிவமொக்கா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜனதாவினர் பேசி வரும் நிலையில், அக்கட்சியின் பலம் வாய்ந்த தலைவரான எடியூரப்பாவின் மகன்கள் அரசியல் களத்தில் குதித்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்