"நான் காதல் வயப்பட்ட போது, ஜாதி குறுக்கே வந்தது.." - கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த சித்தராமையா

சட்ட கல்லூரியில் படிக்கும்போது, தன்னுடன் படித்த வேறு சாதியை சேர்ந்த பெண்ணை விரும்பியதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

Update: 2024-05-25 20:17 GMT

கோப்புப்படம்

மைசூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நடந்த கலப்பு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனது கல்லூரி கால மலரும் நினைவுகளை உணர்ச்சி பொங்க பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கல்லூரியில் படிக்கும்போது நானும் கலப்பு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். சட்ட கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படித்த வேறு சாதியை சேர்ந்த பெண்ணை விரும்பினேன். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த பெண் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. அவரது குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு எனது சாதியை சேர்ந்த பெண்ணை பேசி எனக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.

கலப்பு திருமணங்களால் தான் சாதியை ஒழிக்க முடியும். பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் திட்டங்களை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அம்பேத்கர் விரும்பிய சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமானால் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடக்க வேண்டும். இதற்கு எங்களது(காங்கிரஸ்) முழு ஆதரவு உண்டு" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்