6 நபர்கள் பயணிக்கக்கூடிய பேட்டரி ஸ்கூட்டர்

முழுமையாக சார்ஜ் செய்தால் 6 பேர் 150 கி.மீ. வரை பயணிக்க முடியும். இது மட்டுமல்ல இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 8-10 ரூபாய் மட்டுமே செலவாகும்.;

Update:2022-12-11 19:09 IST

மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது சில வித்தியாசமான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார். குறிப்பாக வாகனம் குறித்த ஏதாவது வித்தியாசமான வீடியோக்கள் வந்தால் அதை நிச்சயம் வெளியிடுவார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோதான் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியுள்ளது.

2 சக்கரங்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்கூட்டரில் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 6 பேர் பயணம் செய்கின்றனர். முதலில் இதை ஒரு இளைஞர் மட்டும் ஓட்டுகிறார். பின்னால் மீதி 5 பேர் அமர்வதற்கான இருக்கை இருக்கிறது.

அது மட்டுமல்ல, அவர்கள் அந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது பேலன்ஸ் தவறாமல் இருக்க பிடித்துக்கொள்ள கைப்பிடியும் இருக்கிறது. கால்களை வைத்துக்கொள்ள புட்ரெஸ்டும் இருக்கிறது.

இந்த மின்சார இரு சக்கர வாகனத்தில் 6 பேர் பயணம் செய்யலாம் என்பது மட்டும் சுவாரசியம் இல்லை. இதில் உள்ள பேட்டரி மற்றும் மைலேஜும் மிகவும் முக்கியம். முழுமையாக சார்ஜ் செய்தால் 6 பேர் 150 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

இது மட்டுமல்ல இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 8-10 ரூபாய் மட்டுமே செலவாகும். அப்படி என்றால் வெறும் ரூ.10 செலவில் 150 கி.மீ பயணிக்க முடியும். அதுவும் 6 பேர் பயணித்தால் ஒரு நபருக்கு வெறும் ரூ.1.66 தான் செலவாகும்.

இவ்வளவு குறைந்த செலவில் 150 கி.மீ. தூர பயணம் என்பது இதுவரை எந்த வாகனத்திலும் சாத்தியமில்லை. ஆனால், இந்த மின்சார இரு சக்கர வாகனத்தின் வேகம் குறித்த தகவல்கள் இல்லை. அதேவேளையில் இந்த வீடியோவில் மேலும் சில அம்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது.

ஸ்கூட்டரின் முன்பக்கம் எல்.இ.டி. விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பகுதி விளக்காக வேலை செய்யும். இரவு நேரங்களில் பயன்படுத்த இது உதவும். அடுத்தாக மிக முக்கியமாக சஸ்பென்சனை பொறுத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும், டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளம், மேடு மற்றும் சாலைகளில் வேகத்தடைகள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பயணிக்க முடியும்.

இ ந்த மின்சார ஸ்கூட்டர் பார்க்க நன்றாக இருந்தாலும் இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. 6 பேர் அமரும் அளவிற்கு நீளமாக இருப்பதால் இந்த ஸ்கூட்டரை திருப்புவது கடினம். வேண்டும் என்றால் இதை நீண்ட நிலப் பரப்பு கொண்ட உள் கட்டமைப்பு பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் அல்லது பெரிய மால்களில் சிறுவர்கள் ஓட்டுவதற்காகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் வாகனத்துறை நிபுணர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்