செல்போன் - டி.வி.க்கு 'ஓய்வு' கொடுக்கும் கிராமம்
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் வட்கான் கிராமத்தில் செல்போன் - டி.வி.க்கு ‘ஓய்வு’ கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.;
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் இல்லாமல் ஒரு மணி நேரத்தை கழிப்பது என்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. முதியவர்கள் கூட தங்கள் பொழுதை போக்குவதற்கு செல்போன், டி.வி. போன்ற மின்னணு சாதனங்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் செல்போன் மூலம் கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டதால் குழந்தைகளிடத்திலும் டிஜிட்டல் மோகம் அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடம் முடிந்ததும் செல்போனில் மூழ்கியே பொழுதை போக்குகிறார்கள். பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று முன்னோடி திட்டம் ஒன்றை செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அந்த கிராமத்தில் தினமும் இரவு ஒன்றரை மணி நேரம் செல்போனோ, தொலைக்காட்சியோ பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தினருடனோ, உறவுகளுடனோ உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்திற்கு அவசிய தேவையாக விளங்கும் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கும் அந்த கிராமத்தின் பெயர், வட்கான். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தினமும் இரவு 7 மணி ஆனதும் அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் சைரன் ஒலிக்கிறது.
உடனே கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள டி.வி. சுவிட்சை ஆப் செய்துவிடுகிறார்கள். செல்போன்கள் பார்ப்பதையும் நிறுத்திவிடுகிறார்கள். சிலர் வீட்டுக்கு வெளியே வந்து அக்கம், பக்கத்தினருடன் உறவாடுகிறார்கள். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இரவு 8.30 மணிக்கு மீண்டும் சைரன் ஒலி ஒலிக்கிறது. அதன் பிறகுதான் ஒவ்வொரு வீட்டிலும் டி.வி. சத்தம் கேட்க தொடங்குகிறது. இந்த ஒன்றரை மணி நேரத்தில் செல்போன், டி.வி. பார்க்காமல் பலரும் பயனுள்ள வழியில் செலவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது ஆரம்பத்தில் சிரமமான, சவாலான காரியமாகவே இருந்திருக்கிறது.
இது குறித்து கிராம சபையின் தலைவர் விஜய் மோஹிதே கூறுகையில், ''எங்கள் கிராம மக்கள் குறிப்பிட்ட நேரமாவது டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. எங்களின் யோசனையை ஆண்கள் கேலி செய்தனர். எப்போதும் டி.வி. பார்க்கும் பெண்களை ஒப்புக்கொள்ள வைப்பது சாத்தியமில்லை என்றனர்.
பெண்களிடம் பேசியபோது அவர்களிடத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மீது ஈர்ப்பு இருப்பது உறுதியானது. அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். பின்பு கோவிலில் சைரன் கருவியை பொருத்தினோம். இரவு 7 மணிக்கு சைரன் ஒலித்ததும் கிராம சபை ஊழியர்களும், தன்னார்வலர்களும் கிராமத்தில் ரோந்து வந்து டிஜிட்டல் சாதனங்களை அணைக்கும்படி வலியுறுத்துவார்கள்'' என்கிறார். இந்த கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது.