இது எங்க புது வண்டி: ஓரம்போ...! இது அமெரிக்க கதை..!

கிறிஸ் மற்றும் சாரா இருவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற யூ-டியூபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சத்து 25 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தாங்கள் வாங்கிய ஆட்டோவை யூ-டியூப்பில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்;

Update:2023-01-01 20:52 IST

இந்தியர்களின் பிரபலமான வாகனங்களில் ஒன்று மூன்று சக்கர வாகனமான ஆட்டோ. முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஏதுவான வாகனமாக இது உள்ளது. நமக்கு மிகவும் பழக்கமான ஆட்டோவை, அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி வாங்கி பயன்படுத்தி வருவது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் இருந்தபடியே அவர்கள் ஆட்டோவை வாங்கி இருக்கும் நிலையில், ஓரம்போ பட காட்சிகளை போல தாறுமாறாக ஆட்டோ ஓட்டிப் பழகி வருகிறார்கள்.

இந்த புதுமை செய்திக்கு வித்திட்டவர்கள், கிறிஸ் மற்றும் சாரா எனும் அமெரிக்க தம்பதி. இவர்கள் சிறிய ரக 'ஹேட்ச்பேக்' காரை வாங்கத் திட்டமிட்டனர். பின்னர் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆட்டோ அவர்களைக் கவரவே, அதை வாங்கிப் பயன்படுத்த தொடங்கினர்.

இவர்கள் இருவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற யூ-டியூபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சத்து 25 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தாங்கள் வாங்கிய ஆட்டோவை யூ-டியூப்பில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

2018-ம் ஆண்டு, மாடல் டி.வி.எஸ். கிங் ஆட்டோவை இவர்கள் வாங்கியிருக்கின்றனர். கார் நிறுத்த போதிய இடம் இல்லாததால் ஆட்டோ வாங்கியதாக விளக்கம் அளித்துள்ள அவர்கள், நீண்ட பயணங்களுக்கு பெரிய வேனையும், குறுகிய தூரம் செல்ல ஆட்டோவையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக் மார்க்கெட் பிளேசில் காட்சிப்படுத்தப்பட்ட ஆட்டோவை அமெரிக்காவில் இருந்தவாறே வாங்கினர். விலையும் மலிவு, பெட்ரோல் செலவும் குறைவு, அதிக மைலேஜ் கிடைப்பதாக ஆட்டோவுக்கு இந்த தம்பதி சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாக ஆட்டோவை பயன்படுத்தவும் இவர்கள் திட்டமிட்டு உள்ளனர். முதலில் ஆட்டோவை ஓட்ட தாங்கள் எதிர்கொண்ட சிரமங்களையும் வீடியோவாக காட்சிப்படுத்தியுள்ள இவர்கள், தங்களின் நாடோடி பயணத்திற்கு ஏற்ற வாகனம் ஆட்டோதான் என்கின்றனர்.

இதற்கு முன்பு இவர்கள் நடைப் பயணம், சைக்கிள் மூலம் பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். நீண்ட தூர பயணங்களுக்காக தங்களிடம் உள்ள பெரிய வேனை வீடு போன்று மாற்றி அமைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்