பாரம்பரிய நெசவு ஆடைகளை பாதுகாக்கும் குடும்பம்..!

‘ஆஷாவலி’ நெசவு முறையை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒற்றைக் குடும்பம் இன்றளவும் பாதுகாக்கிறது என்பது நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.;

Update:2022-12-18 14:44 IST

 நெசவு ஆடைகள், பண்டைய இந்தியாவின் வாணிபம் மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்குவகித்தது. இந்தியாவில் நெய்யப்பட்ட ஆடைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்தது. ஆடைகள் மட்டுமல்லாமல் நெசவுமுறையும் இந்தியாவில் இருந்துபிற தேசங்களுக்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் பரவியது. அப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களும் உயர்குலத்தவர்கள் மட்டுமே அணியும் ஆடைகளை நெய்யும் முறை இந்தியாவிற்கு வந்தது. பின்னாளில் அது 'ஆஷாவலி' நெசவு என்று பெயர் பெற்று விளங்கியது. அந்த நெசவு முறையை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒற்றைக் குடும்பம் இன்றளவும் பாதுகாக்கிறது என்பது நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ரித்ரோல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், சோமாபாய் பட்டேல். ரித்ரோல் கிராமம் ஆஷாவலி நெசவிற்குப் புகழ் பெற்ற ஊர். 80 ஆண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்தபொழுது விளையாட்டாய் அதைக் கற்றுக்கொண்டார் சோமாபாய்.

மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய முடியாதபோது, ஆஷாவலி சேலைகளை நெய்யத் தொடங்கினார். பின்னாளில் அதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார். ஆஷாவலி என்பது தங்கம் மற்றும் வெள்ளிப்பட்டு ஜரிகைகளால் ஆன பல்வேறு வடிவங்களைக் கொண்ட உயர்தர ஆடம்பர ஆடை.

1970 முதல் 1980-களில் அதிகப்படியான இயந்திரங்கள் மூலம் நெசவுத்துறை முழுவதும் நவீனமாகிக் கொண்டிருந்தது. இந்தியாவில் கைத்தறி நெசவில் ஈடுபட்டிருந்தவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். ஆஷாவலி நெசவில் ஈடுபட்டிருந்தவர்களும் தொழிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் புதிதாக நான்கு தறிகளை அமைத்தார் சோமாபாய்.

தொழிலை விட்டு வெளியேறும் நெசவாளர்களையே தன்னுடைய தறிகளில் நெசவு செய்ய பணியமர்த்தினார். அந்த அளவிற்கு அவர் ஆஷாவலி நெசவின் மீது பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

சோமாபாய் ஆஷாவலி சேலை வியாபாரத்தைத் தொடங்கி 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் அவர் தாத்தாவின் ஆர்வத்தில் எள்ளளவும் குறையாமல் தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது பேரன் பரேஷ் பட்டேல். நான்கு தறிகளுடன் தொடங்கிய அவர்களின் நிறுவனம் இன்று 55 தறிகள் அமைத்து 30 நெசவாளர்களுடன் இயங்கி வருகிறது.

சோமாபாய் பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்ட கலை இன்று அவர் பேரன் வரை காலம் கடந்து வெற்றிகரமான வியாபாரமாக வளர்ந்து நிற்கிறது. பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி தாய்லாந்தின் அரசக் குடும்பம் வரை இவர்களின் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

ஆஷாவலி நெசவு வரலாற்றை பற்றி விவரிக்கும் பரேஷ் பட்டேல், "அதிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட பூக்களை உடைய ஆடையை நெசவு செய்யும் முறைக்குப் பெயர் புரோகேட் நெசவு (Brocade weaving). அப்படியான புரோகேட் நெசவு 9-ம் நூற்றாண்டில் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அகமதாபாத், கம்பாத், சூரத், ஜாம்நகர் போன்ற குஜராத்தின் முக்கிய நகரங்களில் இந்தக் கலை செழித்து வந்ததாகவும் கூறுகிறார்கள். 11-ம் நூற்றாண்டில் குஜராத்தை ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஆஷாபில். எங்கள் பகுதியில் உருவாகும் ஆடைகள் என்பதால் மன்னரை தொடர்பு படுத்தி இவற்றுக்கு ஆஷாவலி என்ற பெயர் வந்தது. பின்னர் இதே நெசவு முறை வாரணாசி வரை சென்று பனாரசி ஆடைகள் என்றும் பெயர் பெற்றது" என்று கூறுகிறார்.

பழமை வாய்ந்த தொழிலானாலும் புதுமைகளைப் புகுத்துவதிலும் இவர்கள் சளைத்தவர்கள் இல்லை. ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் தேவைப்படும் ஜாலா (jala) நெசவு முறையில் இருந்து 2 நபர்களே போதுமான ஜாக்கார்டு (jacquard) நெசவு முறையை அறிமுகப்படுத்தினார் பரேஷின் தந்தை விஷ்ணு பாய் பட்டேல். பரேஷ் பட்டேலோ ஒருபடி மேலே போய் இயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். பட்டுத்துணியிலும் கூட பெங்களூருவில் உள்ள மல்பரி வகையே பயன்படுத்தப்படுகிறது.

அதைப் பற்றிக் கூறும் பரேஷ், "எனக்கு இயற்கை நிறமூட்டிகளை மிகவும் பிடிக்கும். அதன் வாசனை கூட என்னைக் கவர்ந்தது. எந்தவித ரசாயனமும் கலக்காமல் சேலை நெய்வது மனதுக்கு ஒருவித நிம்மதியைத் தருகிறது. ஒரு சேலை நெய்வதற்கு 15 முதல் 20 நாட்களாகும். ஆனால், நெய்யப்பட்ட சேலையைப் பார்க்கும்போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும். எங்களிடம் 15 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சேலைகள் உள்ளன. வருடத்திற்கு 400 முதல் 500 சேலைகள் வரை தயார் செய்கிறோம்" என்று சந்தோஷம் பொங்கக் கூறுகிறார்.

 

எல்லா தொழில்களையும் முடக்கிப் போட்ட கொரோனா காலத்தை எப்படிச் சமாளித்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், "நாங்களும் கொரோனாவினால் பல சிக்கல்களைச் சந்தித்தோம். காந்திநகரில் ஆஷாவலி சேலைகளுக்கான எங்களுடைய பிரத்யேகக் கடையை திறக்க முடியவில்லை. ஆதலால் 30 ஆண்டுகளாக எங்களுடனேயே பயணிக்கும் சக தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத சூழல். அந்த நிலையில்தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்களுக்கு கைகொடுத்தனர். ஆதலால் முன்பை விட இப்போது அதிக உத்வேகத்துடன் பயணிக்கிறோம். நேர்மையும் உழைப்பும் இருந்தால் இந்தப் பழமைவாய்ந்தத் தொழிலிலும் முன்னேறலாம்" என்று கூறி முடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்